அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் மிகவும் மகிழ்ச்சியான ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவு நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது முழுமையான வெற்றி என்றும், கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் கழகத்தில் சேர்ப்போம் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுகவிற்குள் சசிகலா உள்ளிட்ட நீக்கப்பட்ட நிர்வாகிகள் இணைக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.