Categories
மாநில செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பு… ஐ.பி.எஸ் அலுவலர் மீது மனைவி வன்கொடுமை புகார்!

 வன்கொடுமை செய்த கணவர் மீது நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும், இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர் மனைவி தெரிவித்துள்ளார்.

தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐபிஎஸ் அலுவலராக கேரளாவில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து 500 சவரன் நகையுடன் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஆனந்திற்கு கேரளாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவி அருணாவை, ஆனந்த், அவரது தாய் மலர்கொடி இருவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அருணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், கடந்தாண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கைத் திரும்பப் பெறுமாறு ஆனந்த் தன்னை மிரட்டுவதாக அருணா காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

கணவர் ஆனந்துடன் அருணா

இந்நிலையில், இன்று தேனாம்பேட்டை காவல் நிலையம் வந்த அருணா, நீதிமன்ற நகலை கொடுத்து ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் மறுப்பதாக அருணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎஸ் அலுவலர் என்பதால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்மீது வழக்குப் பதியாமல் காப்பாற்றிக் கொள்வதாகவும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும் கூறினார். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் அருணா தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அருணாவுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் காவல் துறையினரிடம் பேசினர். ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது காவல் துறை இரண்டு நாள்களில் வழக்குப் பதியவில்லை என்றால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |