சென்னையில் பழுது பார்க்கும் பணியின் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்களின் குடும்பம் ரூ50,00,000 இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடத்தினர்.
சென்னை கொத்தல் சாவடி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து சவுகார்பேட்டை மின்சார ஊழியர்கள் வின்சென்ட் உதய சூரியன் ஆகியோர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து கொத்தால் சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மின்சார ஊழியர்கள் இறந்த தகவல் தெரிந்தும் சம்பவ இடத்திற்கு சக ஊழியர்கள் யாரும் வரவில்லை எனவும் அவர்கள் இறந்த செய்தியைக் கூட வீட்டிற்கு தெரிவிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை உட்பட அனைத்து முறைகளும் முடிந்தபின்பு காவல்துறையினரால் இருவரது உடல்களும் அவரவர் வீட்டில் ஒப்படைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததோடு தகவல் தெரிவிக்காமல் இருந்த மின்சார அலுவலர்களை கண்டித்தும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ50 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்ய மின்சார அலுவலர்கள் முயற்சித்த பொழுது வாக்குவாதம் முற்றவே காவல்துறையினரை வைத்து சமாதானம் செய்யப்பட்டு பின் உறவினர்கள் ஊழியர்களின் உடலை பெற்றுக்கொண்டனர்.