கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும் ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ராஜேந்திரன் படுகாயமடைந்தார்.
இதனைப் பார்த்த அந்தபகுதி மக்கள், உடனடியாக ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத் துறையினர் இறந்து போன முனிராஜ் உடலை எடுக்க முயன்றனர்.
அப்போது, முனிராஜின் உறவினர்கள் அவரது உடலை தர முடியாது என்று மறுத்து, திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.. இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் பூவிதன் மற்றும் ஓசூர் டிஎஸ்பி முரளி ஆகியோர் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், காட்டு யானைகளால் இனி பொதுமக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் வராது என வனத் துறையினர் உறுதியளித்தனர்.. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், அவரது உடல் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.