நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்ற வகைப்பாடின்றி அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணி, சாலை பணிகளுக்கு அனுமதி.
கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் பணிகள் செய்ய அனுமதி.ஹார்டுவேர், சிமெண்ட், எலெக்ட்ரிக், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 11 மணி முதல் 5 மணி வரை இயங்கலாம். 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி. கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்” என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அனுமதி தொடர்பாக தமிழக அரசு சில விளக்கங்களை வழங்கியுள்ளது. அதில், “அரசால் அளிக்கப்பட்ட தளர்வுகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைபாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் ( தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர ) என தெரிவித்துள்ளது.