ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று காலை தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,
- தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஊரகப்பகுதிகளில் கட்டுமானப்பணிகள் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, மேம்பால பணிகள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மே 3-ம் தேதிக்கு பிறகு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கணட பணிகளை சமூக இடைவெளியை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.