இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். பின்னர் இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் இந்துஜா உள்ளிட்ட பல தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காற்றாலை மின் உற்பத்தி , சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான நிறுவனத்தையும் பார்வையிட உள்ளார். இதுதவிர இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார்.
செப்டம்பர் 2_ஆம் தேதி நியூயார்க் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளார்.தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்திவரும் கேட்டர்பில்லர் , போர்டு , பாக்ஸ்கான் , லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத் தரம் வாய்ந்த கால்நடை பூங்காவிற்கு தேவைப்படும் தொழில் நுட்பங்களை அறிய கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை முதலமைச்சர் பார்வையிட உள்ளார்.
பின்னர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்கனவே உள்ள மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பாக வழிமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிய சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் முதல்வர் பார்வையிடுகிறார். செப்டம்பர் 7_ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் 8 , 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் துபாயில் உள்ள தொழில் முனைவோர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே ஒரு கூட்டம் நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்புகிறார்.