பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார். பிரதமரின் அந்தக் கோரிக்கையை ஏற்று பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கிவருகின்றனர். இந்த நிலையில் பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ 500 கோடி வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக டாட்டா அறக்கட்டளை சார்பில் 500 கோடியும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.