நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நாட்டில் உள்ள ஏழை மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், விதவைகள், பெண்கள், வயதானவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நிதி உதவியை தருவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் நேற்று வரை மக்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விதவைகள் வயதான குடிமக்கள் என 2.82 கோடி மக்களுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு இதுவரை ரூ.14,146 கோடியும், 2.17 கோடி கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3,497 கோடி வழங்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, மத்திய அரசு அறிவித்த 24% தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு ரூ.162 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33.14 கோடி பயனாளர்களுக்கு ரூ.31,235 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.