பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “பொருளாதாரத்தை குப்பையைப் போல் மோடி கையாண்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. மத்திய அரசு ஏழை மக்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு ஆதரவளிக்காமல் இருப்பதன் மூலம் நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம்” என பதிவிட்டுள்ளார்.