வேலூரில் தேர்தல் அதிகாரிகளால் தனியார் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை விதித்து பின்பற்றிவருகிறது.
இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் முஸ்லிம் அமைப்புகளுடன் தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக கூறி புகார் எழுந்தத்தையடுத்து தேர்தல் அதிகாரிகள் தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தும், தேர்தல் விதிமுறைகளை மீறுதல், செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்த் முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் ஆகியயோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்ததை நீக்கக்கோரி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.