இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது.
இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. இது பற்றி இந்திய தூதர் மற்றும் இந்த மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருக்கும் ருச்சிரா கம்போஜ், 15 நாடுகளுடைய கவுன்சிலின் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கும் தலிபான்கள் தடை அறிவித்ததாக வெளியான தகவல்களால் கவுன்சில் உறுப்பினர் கடும் அச்சம் மற்றும் வருத்தமடைந்திருக்கிறார் எனவும் இந்த கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் உடனே மாற்ற வேண்டும் என்று தலீபான்களை அவர் வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.