இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கான 50ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்தியாவின் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளுநர்களின் பணி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்களின் பணி இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதையும் கடந்து, மாநில மக்களோடு மக்களாக இருந்து, அவர்களுக்கான நல்ல திட்ட சேவைகளையும் செயல்படுத்துதலாகும்.
‘சுவச் பாரத்’ திட்டத்தை போல் ‘ஜல் சக்தி அபியான்’ இயக்கத்தையும் முக்கியத்துவம் கொடுத்து, நாட்டு மக்களிடையே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மத்திய – மாநில அரசுகள் இடையே இருக்கும் ஆரோக்கியமானப் போட்டிகள் என்பது நாடு வளர்ச்சி பெறும் என்றால், அதை வரவேற்க வேண்டும். மேலும் அதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “இந்திய மாணவர்களுக்கான சிறந்த அறிவாற்றலை மேம்படுத்த மத்திய அரசின் இந்த புதிய கல்வித் திட்டம் வழி வகுக்கும்” எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.