மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் தனியார் தொண்டு நிறுவனங்கள் கிராம வங்கியில் மோசடி செய்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் கிராம வங்கியின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிளைகளில் கடன் தொகை பெற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கடனை திரும்ப செலுத்திய நிலையில், அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் ஒரு தனியார் நிறுவனம் மோசடி செய்திருக்கிறது.
இதனால், சரியாக கடன் தொகையை திரும்பி செலுத்திய பெண்களை மீண்டும் கடனை செலுத்துமாறு தமிழக கிராம வங்கி துன்புறுத்தி வருவதோடு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் சம்பவங்களும் நடக்கிறது. மாநிலம் முழுக்க 20-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் கிராம வங்கியால் இவ்வாறு வசூல் பணிகளை மேற்கொள்வதாக தெரியவந்திருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் இவ்வாறு மோசடி செய்து வருவதாகவும் இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எனவே இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மோசடி செய்த தனியார் நிறுவனங்கள் மீதும், இந்த மோசடியில் பங்கு இருக்கும் பட்சத்தில் தமிழக கிராம வங்கி நிர்வாகிகள் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.