அரசு ஊழியர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அத்தியாவசியத் துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 100 சதவீதமும் மற்ற துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 50 சதவீதமும் பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஊரடங்கு தளர்வில் பேருந்துகள் இயக்கப்பட அனுமதி இல்லாததால் அரசு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பயணத்தின் போது மிகுந்த செலவு ஆகின்றது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி, கள்ளிப்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, எஸ்.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து மதுரைக்கு வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.