நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே படத்தைக் காண குவித்துள்ளனர்.
அதேபோல் நடிகர் கார்த்தி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று கைதி திரைப்படமும் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.
காமெடி நடிகர் யோகி பாபு இந்த இரண்டு படங்களிலுமே நடித்துள்ள நிலையில், ஒரே நாளில் படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய், கார்த்தி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.அதில், ‘விஜய் சார் ரசிகர்கள், கார்த்தி சார் ரசிகர்கள் எந்தவித சண்டையிலும் அசம்பாவிதங்களிலும் ஈடுபடவேண்டாம். தேவையில்லாத கருத்துகளைக் கூற வேண்டாம். இரு படங்களுமே மாபெரும் வெற்றியடைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/yogibabu_offl/status/1187551647414681600