ரேஷன் அரிசிகளை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தாண்டவபுரம் பகுதியில் குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு குடிசை வீட்டில் அதிகமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டின் உள்ளே 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் மர்ம நபர்கள் பொதுமக்களிடமிருந்து குறைவான விலைக்கு அரிசிகளை வாங்கி வெளிமாவட்டத்திற்கு எடுத்து செல்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மூட்டைகளில் இருந்த 1 டன் அளவுடைய அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிசியை கடத்தி அதை இங்கு பதுக்கி வைத்தது யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.