பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறி நூதனமான முறையில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணம்பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மெயின் ரோட்டில் இருக்கும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகாமையில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தனியார் வங்கி ஒன்றில் பணம் செலுத்தும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்து கொண்டு அவ்வழியாக செல்கின்ற பொதுமக்களிடம் பிரதமர் நிதியிலிருந்து ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 9 ஆயிரம் பணம் வந்திருக்கிறதா கூறியுள்ளனர்.
இதனையடுத்து பூர்த்தி செய்யாத படிவத்துடன் வந்தவர்கள் ரேஷன் கார்டை சம்பந்தப்பட்ட தனியார் வங்கியில் கொடுத்தால் 9௦௦௦ ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் அங்கே கூடியுள்ளனர். இதற்கான படிவத்தை வழங்க ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்பின் மர்மநபர்கள் பூர்த்தி செய்து கொடுத்த கடிதத்தை எடுத்து கொண்டு அவர்கள் தனியார் வங்கிக்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர்.
இதில் படிவத்தை வாங்கி பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து இதை யார் உங்களுக்கு கொடுத்தது பணம் வழங்குவதற்கு எந்த அரசும் இப்படி ஒரு உத்தரவை வழங்க வில்லை என தெரிவித்துள்ளனர். அதற்குப் பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் மர்ம நபர்களை தேடி அவர்கள் குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போது அவர்கள் அங்கு இல்லை. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து நூதன முறையில் பணத்தை பறிப்பதற்கு மர்ம நபர்கள் போலியான தகவலை கூறி பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.