கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதற்கு சீன ஆய்வாளர்கள் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த புதிய ரோபாவை உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரோபோ மூலம், மருத்துவர் நோயாளியுடன் நெருங்காமல் மருத்துவ பரிசோதனைகளை செய்ய முடியும். தற்போது இரண்டு ரோபோக்களை உருவாக்கியிருக்கும் இந்த குழுவினர், அவற்றை மருத்துவமனைகளில் சோதனை முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு ரோபோ தயாரிப்பதற்கு இந்திய மதிப்பில் ரூ .54 லட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.