விசைத்தறி தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சத்திரப்பட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பேண் டேஜ் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டுக்கான (2018-19) கூலி 6.66 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை கூலி உயர்வு வழங்கவில்லை. இது தொடர்பாக உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வரவில்லை. இந்நிலையில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைஅடுத்து நேற்று வட்டாச்சியர் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.