ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது.
ஜேமஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயத்துக்கு உரிய இழப்பீடு தர படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 2015இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜேமஸ் பாண்ட் சீரிஸ் படம் ‘ஸ்பெக்ட்ரே’. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் டெர்ரி மேடன்.
ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஸ்பெக்டரே படத்துக்கான அதிரடி சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது மேடன் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் ரேஞ் ரோவர் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மேடன் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் மேடனின் கால்கள் பலத்த காயமடைந்தன.
இதைத்தொடர்ந்து இந்த விபத்தால் தனது சினிமா வாழ்க்கையை இழந்துவிட்டதாகவும், இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி ஸ்பெக்ட்ரே படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயன் புரொடக்ஷன் மற்றும் பி24 நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை லண்டனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அப்போது இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அப்போது ரகசிய உடன்படிக்கை மூலம் இழப்பீடு விவகாரம் தீர்த்துக்கொள்ளப்பட்டது என்று நீதிபதி கரென் வால்டென்-ஸ்மித்திடம் தெரிவித்தனர்.