வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் வடபழனி பணிமனையில் இருந்து காலையில் 176 பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி பணிமனையில் இருந்து பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் அனைவரும் தவிப்பிற்க்கு ஆளாகினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு 3மணி நேரம் கழித்து பேருந்து இயக்கப்பட்டது.
இதற்க்கு முக்கிய காரணம் பாதுகாப்பு அதிகாரிகள் தொழிற்சாலை பிரிவில் செய்யத்தவறிய வேலையும், மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்தின் கட்டமைப்பை பரிசோதிக்க வேண்டியவர்களும், பராமரிக்க வேண்டியவர்களும் செய்யத் தவறியதுதான் விபத்துக்கான அடிப்படை காரணம் என்று ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். அனைத்து 320 பணிமனைகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தந்ததற்குப் பிறகும் நிர்வாகத்தின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகின்றனர்.