மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்தத் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பினராயி விஜயன் கொண்டுவந்த இச்சட்டத்தை காங்கிரசும் ஏகமனதாக வரவேற்றது.
ஆக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிட்டியது. இந்தத் தீர்மானத்தை பா.ஜனதாவின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் மட்டுமே எதிர்த்தார்.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பினராயி விஜயனுக்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பா.ஜனதா எம்.பி. நரசிம்ம ராவ் புகாரளித்து உள்ளார்.
இதற்கு செய்தியாளர்கள் மத்தியில் பதிலளித்த பினராயி விஜயன், “மாநில அரசுகளின் உரிமைகளைப் புறந்தள்ள முடியாது. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சம்பவங்கள் நடக்கின்றன. அரசியல்சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். இதில் மீறல்கள் இல்லை” எனக் கூறினார்.