Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதி!

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை 7, ராஜபாளையம் 4, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |