11 மாதங்களுக்கு முன்பு தம்மை கேலி செய்த அதிபர் டிரம்பை பிரபல சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க் கேலி செய்துள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு, பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக உரையாற்றினார். பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டுவதாக கடுமையாக சாடினார். கிரேடா தன்பெர்க்கின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் அவரை கேலி செய்யும் விதமாக ட்விட் ஒன்றைப் போட்டார். அதில் உன்னுடைய கோபம் அபத்தமானது என குறிப்பிட்ட ட்ரம்ப், கோபத்தை குறைக்க பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் பழைய படங்களை பார்த்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொள் என்று கூறி சில் கிரேடா, சில் என்று கேலி செய்து ட்விட் செய்திருந்தார். அதிபர் டிரம்ப்பின் இந்த ட்விட்டுக்கு அமைதி காத்த கிரேடா தன்பெர்க் தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப்பை டேக் செய்து ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் உள்ளது என்று நீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போய் உள்ளார்.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல கிரேடா தன்பெர்க்கின் இந்த ட்விட் உள்ளது. அதில் ட்ரம்ப் பயன்படுத்திய அதே வார்த்தைகளை கிரேடா தன்பெர்க் பயன்படுத்தி உள்ளார். ட்ரம்ப் உங்களுடைய கோபம் அபத்தமானது என்றும், கோபத்தை குறைக்க பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் கிரேடா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.
So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill! https://t.co/4RNVBqRYBA
— Greta Thunberg (@GretaThunberg) November 5, 2020
மேலும் பழைய படங்களைப் பார்த்து, கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஜில் டொனால்ட், ஜில் என்று கேலி செய்துள்ளார். பதினோரு மாதங்கள் காத்திருந்து சரியான நேரத்தில் டிரம்புக்கு கிரேடா தன்பெர்க் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். கிரேடா தன்பெர்க்கின் ட்விட்டுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆதரவான ட்விட்களும் வந்த வண்ணம் உள்ளன.