அவனியாபுரம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே இருக்கும் தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் அவா(எ)முத்துச்செல்வம் என்பவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், முத்துச்செல்வம் வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அவரின் தலையில் பலமாக வெட்டியுள்ளனர். இதனால் தனியாக துண்டான அவரின் தலை கோயிலின் வாசலிலேயே விழுந்தது. அதனைத்தொடர்ந்து கொலைசெய்துவிட்டு அங்கிருந்து அந்தகும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து முத்துச்செல்வத்தின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2011ஆம் ஆண்டு பாமக பிரமுகர் இளஞ்செழியன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக இளஞ்செழியன் தம்பி மாரி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வில்லாபுரம் பகுதியில் வைத்து கனி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரைக் கொலை செய்துள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த கனி, அம்பேத்கர் ஆகியோரின் ஆதரவாளர்கள் இளஞ்செழியன் தம்பியை 2019ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி வீட்டு வாசலில் ஓடஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்தக்கொலை வழக்கில் முத்துச்செல்வத்திற்கு தொடர்பு இருப்பதாகக் சொல்லப்படுகிறது. இதனால் பழிக்குப் பழியாக மாரி ஆதரவாளர்கள் தற்போது முத்துச்செல்வத்தைக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.