Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, அண்ணா நகர் – 86 என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரிடர் காலங்களில் அனுபவம் பெற்ற ராதாகிருஷ்ணன் சென்னை முழுவதும் கண்காணிப்பை துரிதப்படுத்த சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகேஷ்குமார் அகர்வால், அபாஸ் குமார், அம்ரேஷ்புஜாரி, ஆபய்குமார் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |