ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்காட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும் என துணை முதல்வர் விளக்கம் அளித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த மாதம் 2வது தவணையாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்தது. கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3வது தவணையாக ரூ.335.41 கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுத்துள்ளது.