வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் காரீப் சாகுபடி பருவத்திலும், போதிய விளைச்சலின்றி கடும் தட்டுப்பாடு நிலவும் என நாட்டின் வானிலை மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்னைகளை முன்கூட்டி எச்சரிக்கும் ‘ஸ்கைமெட்’ எனும் நிறுவனம் தமது முதற்கட்ட ஆய்வறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விரிவாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்படி, கடந்த தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவு, வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கைமெட் கணக்குப்படி, இயற்கை சீற்றத்தால் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 137 மாவட்டங்களில் 32 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதனால் அரிசி, எண்ணெய் வித்துக்கள், பருப்பு, பயறு வகைகள் உற்பத்தி 12 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.
மத்திய வேளாண்மை அமைச்சகமும் நாடு முழுவதும் 64 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் மழை, வெள்ளத்தால் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக கவலை தெரிவித்ததுடன், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் இரண்டு வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. நாட்டின் நிலைமை மோசமான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு இன்னும் தள்ளாடிவருகிறது.
அக்டோபரில் தொடங்கி பிப்ரவரியுடன் முடிவடையும் விளைச்சல் பருவத்தில் PM-SSA எனப்படும் பிரைம் மினிஸ்டர் அன்னதாதா ஆய் சம்ரக்ஷன் அபியான் என்னும் திட்டத்தின்படி ஏறத்தாழ 37.59 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் இந்தக் காலகட்டத்தில் முதல் இரண்டு மாதங்களில் ஒரு மில்லியன் டன் அளவுக்கு (மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக) மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் உ.பி., ம.பி., ஒடிசா போன்ற மாநிலங்களில் கொள்முதல் பணியே ஆரம்பிக்கப்படவில்லை.
இப்படி விவசாய விளைபொருள்கள் விளைச்சல் குறையும்போது வரத்துக்கும் தேவைக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு சந்தையில் விலைவாசி அதிகரிக்கும் சூழல் உருவாகிறது. இந்த நிலை உருவாகாமலிருக்க, இப்படி பொருள்களின் வரத்துக்கும் அதன் தேவைக்கும் இடையிலான இடைவெளி ஏற்படாமல் சமமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச அளவில், மொத்த உற்பத்தியில் 25 விழுக்காடு அளவுக்கு பயறு வகைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த உற்பத்தியும் உள்நாட்டுத் தேவைக்கே பற்றாக்குறையாவதால், வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதே போன்று உள்நாட்டில் 12 முதல் 15 விழுக்காடு அளவுக்கே எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் செய்யப்படும் நிலையில், சமையல் எண்ணெய்க்காக தொடர்ந்து வெளிநாடுகளையே எதிர்பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இப்படி வெளிநாடுகளையே எதிர்பார்க்க வேண்டிய நிலைமைக்கு முடிவு கட்ட, மத்திய வேளாண் செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையம் (CCAP), நீண்டகால திட்டம் ஒன்றை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைத்தது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் இந்தப் பரிந்துரைக்கு சம்மதித்தது, அத்துடன் பருப்பு வகைகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதார விலை கிடைக்கச் செய்ய ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது.
PM -AASA திட்டம் அமல்படுத்தப்பட்ட நான்கு மாதங்களிலேயே கடந்த செப்டம்பரில் 25 மில்லியன் டன் அளவுக்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இது ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் வரம்பில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டிற்கு சமமாகும். இத்திட்டத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் கிடைத்த இந்த முன்னேற்றம், நாஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முந்தைய செயல்பாடுகளை கேள்வி கேட்பது போல் அமைந்தது.
உண்மை நிலவரத்தை உணராமல் மந்தகதியில் நாஃபெட் செயல்பட்டதாக விமர்சனத்திற்கும் ஆளானது. கடந்த இரண்டு ஆண்டில் PM-SSA திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.15,053 கோடியும் இத்திட்டத்தின் கீழ் செயல்படும் கொள்முதல் அமைப்புகள் தங்கள் பங்குக்கு ரூ.16,550 கோடியை கூடுதல் கடனாக வழங்கியுள்ளன. ஆனாலும் கீழ்மட்ட அளவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, பயறு, பருப்பு வகைகளை வாங்குவதில் சாமானியனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு விரைந்து செயல்பட்டு குறைபாடுகளைக் களைய வேண்டும்.
வரும் காலங்களில் போதிய அக்கறையும், கூட்டு முயற்சிகளையும் மேற்கொள்ளாவிடில் பருப்பு, எண்ணெய் வித்துக்களில் நாடு தன்னிறைவு பெறுவது என்பது இயலாத ஒன்றாகிவிடும். ஒட்டுமொத்த பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க, சிறந்த விவசாய யுக்திகளை கையாள்வதுடன், பசுமைப் புரட்சித் திட்டங்களை நம் நாட்டில் அமல்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
பருத்தி உற்பத்தியை சீனா இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அமெரிக்காவோ மக்காச்சோள உற்பத்தியை ஒன்பது மடங்காக உயர்த்திவிட்டது. நிலக்கடலை, சூரியகாந்தி, எள், ஆமணக்கு போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடவே முடியாத அளவிற்கு இந்தியாவின் நிலை பரிதாபமாக உள்ளது.
அதேபோன்று உள்நாட்டு பயிர் விளைச்சலை அதிகரிக்க வேறுபல நாடுகளும் முனைப்பு காட்டி முன்னேறுகின்றன. ஆனால் பெரும் பரப்பிலான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், அதிசயமாக குறைந்த விளைச்சல் என்பது வருத்தமும், பொதுமக்களிடையே கோபமும் அடையச் செய்கிறது.
கூடுதல் பயிர் விளைச்சல் செய்தாலும், கூடுதல் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்பதால் இந்திய விவசாயிகள் அதனைக் கொண்டாட முடியாத நிலையே உள்ளது. கூடுதல் விலைக்கு விற்று, அதன் பலனை இடைத்தரகர்களும் பொருட்களை பதுக்கி விற்கும் வியாபாரிகளும் அனுபவிக்கின்றனர். விவசாய ஒருவர் தான் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை உரிய விலைக்கு விற்க வேண்டுமெனில், அதனை சேமித்து வைத்து, அதன் தேவை ஏற்படும்போது விற்பனை செய்வதற்கு வசதி இல்லாததும் ஒரு காரணம்.
எனவே விவசாயிகள் உரிய பலன் அடையும் வகையில், அரசும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதுடன், கூடுதலாக உற்பத்தி செய்யும் விளைபொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதே வேளையில், சில பொருள்களின் விளைச்சல் குறையும் பட்சத்தில், அப்பொருள்களின் விலை சந்தையில் அதிகரிக்காமலிருக்க, வெளிநாடுகளிலிருந்து உடனடியாக இறக்குமதி செய்வதற்கான முன் திட்டங்களையும் அரசு அவசியமாக வகுக்க வேண்டும்.
எனவே, அனைத்து பயிர்கள் உற்பத்தி தொடர்பாக உரிய திட்டங்கள் வகுத்து, செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்கமும் முனைப்பும் காட்ட வேண்டியுள்ளது. அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதுடன், விவசாயிகளும் மகிழ்ச்சியடைவார்கள்.
எனவே,உணவுப் பாதுகாப்புக்காக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை செழிப்புடன் வைத்திருக்க, உரிய புரட்சிகரத் திட்டங்களையும் வேளாண்மை சீர்த்திருத்தங்களையும் செயல்படுத்த வேண்டும்.