அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய உற்பத்தி 44% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது என்றும் மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் உணவுப்பொருள் பணவீக்க விகிதம் 8.6% ஆக அதிகரித்துள்ளது. எனினும் இந்தியாவின் 60% உற்பத்தித்துறை கொரோனா சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் அமைந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என அவர் எச்சரித்துள்ளார். நகர்ப்புற, கிராமப்புற தேவைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
மூலதன பொருட்கள் தேவை ஏப்ரல் மாதத்தில் 57 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி துறை 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் 2.9% ல் இருந்து மைனஸ் 6.8% ஆக உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் நிதிக் கொள்கை கூட்டத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். கடந்த 3 நாட்களாக உலக நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அதில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக பொருளாதாரம் சரிவுகளை கண்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீடு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 2-வது பாதியில் பணவீக்க விகிதம் 4%-த்துக்கு கீழ் குறையும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.