Categories
பல்சுவை

உரிமைகள் உனக்கானது: யாரும் கொடுக்கவோ, எடுக்கவோ முடியாது… உயிரியாய் இவ்வுலகில் உலாவருவோம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மனிதம் மட்டும் போற்றாது, அனைத்து உயிர்களின் உயிர்மையும் போற்றுவதாய் உறுதியேற்போம்.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இதில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க ஒரு குழுவை அமைத்தனர்.

அந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனமாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது. இதனையடுத்து டிசம்பர் 10, 1948ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின.

அதன்படி, மனித உரிமைகளை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொண்ட இந்த நாளையே 1950ஆம் ஆண்டிலிருந்து ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ அறிவித்து உலக நாடுகளால் கொண்டாடப்பட்டுவருகிறது.

மனித உரிமைகள் தினம்

இந்தாண்டுக்கான மனித உரிமைகள் தினம், சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும் அமைதியான முறையில் எழுச்சியாய் வரும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை வரவேற்று கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இந்தாண்டுக்கான நோக்கம் “அனைத்து தரப்பட்ட மக்களின் உள்நாட்டு மொழிகள் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆழப்படுத்துதல்” ஆகும்.

மனித உரிமைகள் ஆணையம் சொல்வது மட்டுமின்றி உரிமைகள் என்பது நமக்கானது. இது யாரும் நமக்கு கொடுக்க மாட்டார்களா! அல்லது யாரும் நமது உரிமைகளை பறிப்பார்களா என்று எதிர்பார்க்கவோ… கவலைப்படவோ தேவையில்லை. நமக்கான உரிமையை நாமே நிலை நாட்டுவோம்.

இந்த மனித உரிமைகள் தினத்தன்று மனிதம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் உயிர்மையையும் போற்றுவோம். ஈடிவி பாரத்தின் மனித உரிமைகள் தின வாழ்த்துகள்!

Categories

Tech |