கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது தொடர்பாக இரப்பை, குடல் மருத்துவ நிபுணர் ஜெயக்குமார் கூறியதாவது “சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனே நாங்கள் சிகிச்சையை தொடங்கினோம். உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் சிறுவன் வயிற்றிலிருந்த பேட்டரியை சுமார் 20 நிமிடங்களில் அகற்ற முடிந்தது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருக்கிறது” என்று கூறினார்.