இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பையூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டியன் மற்றும் லொகேஷ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் மல்லாங்கிணறு சென்று விட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஆறுமுகம் மற்றும் தங்கபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் லோகேஷ் உயிருக்குப் போராடிக் கொண்டே இருந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம் மற்றும் தங்கபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.