டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கு பெற்றவர்களை சென்னை தண்டையார்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலர் கொரோனா தாக்கி இறந்துள்ள நிலையில் பலரை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சிலர் சொந்த ஊருக்கு திரும்பினர் அவர்களில் சிலரை தண்டையார்பேட்டை சமூகக் கூடத்தில் தங்க வைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களை தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமுதாய நலக்கூடத்தில் யாரையும் தங்க வைக்கவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர். பெண்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.