மயிலாடுதுறையில் இரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருக்கிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் செல்வி வீட்டில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தமிழ்செல்வியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மோசமாக காயமடைந்த தமிழ்ச்செல்வி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
தமிழ்ச்செல்வி வீட்டில் மயங்கி கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொறையார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தமிழ்செல்வி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.