முன்னாள் ராணுவ வீரர் பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபத்தை சார்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா. இவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிட்டதால் அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் குளத்தில் விழுந்த மேரி ஜெயா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மேரி ஜெயாவின் உடலை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே மேரி ஜெயாவின் உறவினர்கள் மற்றும் சொந்த ஊரைச் சார்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பிணவரை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெர்லின்ராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதுவரை மேரி ஜெயாவின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது