மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குருபீடபுரம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தவமணிக்கு பல் வலி இருந்ததால் தனது மகன் ராஜ்குமார் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் திடீரென தவமணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தியாகதுருவம் காவல் நிலையத்தில் தவமணி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.