பெண்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பவுன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செண்பக வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கமாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் தனது தோழியுடன் அந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென வந்த 3 மர்ம நபர்கள் ஏதோ திரவத்தை இருவரின் முகத்திலும் ஊற்றி அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டனர்.
இதனையடுத்து செண்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் செண்பகவள்ளி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.