4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்றனர்.
இதனையடுத்து செண்பக நகரில் வசித்து வரும் சண்முகம் அம்மாளிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியையும், யாதவர் தெருவில் வசித்துவரும் பேச்சியம்மாள் என்பவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த முருகேஸ்வரி என்பவரிடமிருந்து 3 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. ஆக மொத்தம் 4 பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் 16 பவுன் தங்க நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.