தொழிலாளி ஒருவரின் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கரும்பு வெட்டும் பணிக்கு தண்டபாணி சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியும் 100 நாள் திட்டத்தில் பணிபுரிய சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் வீடு திரும்பிய தண்டபாணியின் மனைவி வீட்டின் கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து கணவன் மற்றும் மனைவி 2 பேரும் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 6,80,000 ஆயிரம் என தெரியவந்துள்ளது. இது பற்றி தண்டபாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகை மற்றும் ரொக்கம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.