பாட்டி வீட்டுக்கு வந்த போது செல்போன் கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கோவிலூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு வாலிபர் சுற்றித் இருந்துள்ளார். அதனால் அவரை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு நண்பர்களுடன் சென்று ஒரு செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.