முத்தூட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் முத்தூட் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் லாக்கர் இருக்கும் அறையை உடைக்க முயன்ற போது அலாரம் அடித்துள்ளது. அலாரம் சத்தத்தை கேட்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சத்தம் கேட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிசிடிவி கேமராவை ஆய்வு செய்யும்போது மர்ம நபர்கள் இருவர் பூட்டை உடைக்க முயன்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை சிசிடிவி கேமராவில் பதிவான நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கல்லக்குடி மாதங்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால் அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்துள்ளதால் சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து காவலர்கள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதில் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இவர்கள் என தெளிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் இந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராஜ்குமார், வெள்ளை கார்த்தி என்பது தெரியவந்துள்ளது. ராஜ்குமார் மீது கொலை வழக்கும் ஒன்று உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து விருதுநகர், சமயநல்லூர், கல்லக்குடி போன்ற பகுதிகளில் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிடிபட்ட நிலையில் மேலும் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.