கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம், சாமி சிலை ஆகியவற்றை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆற்றங்கரை பகுதியில் வேம்பு மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீரமணி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 31ம் தேதி இரவு சாமிக்கு பூசையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த 4 கிராம் அம்மன் தாலி, அம்மனின் பட்டு வஸ்திரங்கள், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஓர் அடி உயரமுள்ள வெண்கல ஐயப்பன் சிலை ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். மேலும் வெளி பிரகாரத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பூசாரி வழக்கம் போல் அடுத்த நாள் காலை கோவிலை திறப்பதற்காக வந்தபோது பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த நகை மற்றும் உண்டியலில் உள்ள பணம் அனைத்தும் கொள்ளை போயிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் குத்தாலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.