Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைவெறியில் தொடங்கிய வெறித்தனம்… 2k கிட்ஸ்களின் ராக்ஸ்டார் அனிருத்…!!

இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். இதுவே சொல்கிறது யார் ராக்ஸ்டார் என…

”எப்படியாவது வாழ்க்கைல ஒரு படத்துக்காது மியூசிக் டைரக்டர் ஆகிறனும்னுதான் என் ஆம்பிஷனாவே இருந்தது… ரொம்ப சீக்கிரமாவே அந்த சான்ஸும் கிடைச்சது. என் ஃபர்ஸ்ட் சிங்கிள் why this kolaveri ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்பறம் என்ன ஆச்சுனு உங்களுக்கே தெரியும். அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டான அப்போ நான் ரொம்ப கெத்தாவே வெளிய வந்தேன். ஆனா வெளிய வந்ததும் நான் கேட்ட வார்த்தைகள், ஒரு படம்தான்… லாட்டரி… குருட்டடி, அடுத்த படம் அவுட்டு, ஓடவுடப் போறாங்க… அப்படினு நிறைய புது வாரத்தைகள கத்துக்கிட்டேன். ஆனா அப்படில்லாமில்ல நானும் டீசன்ட்டா மியூசிக் பண்ணுவேன்னு ப்ரூவ் பண்றதுக்கே எனக்கு 18 படம் ஆகிருச்சு”

இது இசையமைப்பாளர் அனிருத் சமீபத்துல ஒரு தனியார் தொலைக்காட்சி ப்ரொமோவில் பேசியது. இன்னிக்கு தேதிக்கு எந்த பாட்டு ரிலீஸானாலும் அதை போஸ்ட் மார்டம் பண்ற மாதிரி அக்குவேறு ஆணிவேறா தனித்தனியா பிரிச்சு, இந்த மியூசிக் இந்த ஆல்பம் வந்தது, இந்த ட்யூன் இந்த இசையமைப்பாளர் ஏற்கனவே போட்ருக்காருனு எழுதிறாங்க. தமிழ் சினிமாவுல லட்சக்கணக்கான பாடல்கள் வந்துவிட்டது. ஆனால் அந்த லட்சகணக்கான பாடல்களை சிலநுாறு இசையமைப்பாளர்கள் தான் இசைத்திருப்பார்கள்… அவர்களில் தற்போதைய இசையமைப்பாளர்களுடைய பாடல்கள் தான் பெரும்பாலும் கேட்டு எழுதி சிலாகிக்கப்படும்.

அவ்வாறு சிலாகிக்கப்படுவதில், இந்த தலைமுறை இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் அனிருத். 90ஸ் கிட் என்பதாலோ என்னவோ அனிருத்திற்கு 90ஸ் கிட்ஸ்களோடு சேர்த்து 2கே கிட்ஸ்களின் பேராதரவு உள்ளது. ஆனால் கூடவே ஒரு விமர்சனமும் அதிகமாக உள்ளது. அது ”நல்ல மியூசிக் போட்ருக்காரு… ஆனால் எங்க காப்பி அடிச்சாருனு தான் தெரில” பெரும்பாலும் எந்த பாடல் வந்தாலும் அனிருத் என்கிற இளைஞன் மீது இந்த விமர்சனம் வந்து விழுகிறது. ஆனால் இங்கே திருட்டிற்கும் இனஸ்பிரேஷனுக்கும் வித்தியாசம் இல்லாமலே இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவோட சூப்பர் ஸடார் ரஜினி கையால வெளியாக வேண்டிய பாட்டு, ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகி உலகத்தையே தன்வயப்படுத்தியது. ஒரு பாட்டு நல்லாருக்கு மற்றதெல்லாம் எப்படி இருக்குனு கேட்டவர்களுக்கு, போ நீ போ, கண்ணழகா, நீ பார்த்த விழிகள், இதழின் ஒரு ஓரம் னு ஒவ்வொரு பாட்டும் ஒரு உணர்வ தூண்டுற மாதிரி கேட்பவர்களின் மனதை வருடியது. அது சிலருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

புது இயக்குநர்கள் முதல் படத்தை எளிதாக ஹிட் செய்துவிடுவார்கள். ஏனென்றால், அந்த கதை பலமுறை திருத்தி எழுதப்பட்டிருக்கும், தன் அத்தனை உழைப்பையும் கொட்டியிருப்பார்கள். அதனால் வெற்றிபெறும். ஆனால் இரண்டாம் படம்தான் ஒவ்வொரு இயக்குநர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும். இதே விஷயம் இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும். பலரும் ‘3’ படப்பாடல்களை அதிர்ஷ்டம் என நினைக்க, இரண்டாம் படத்தில் அந்த விமர்சனங்களில் ‘எதிர்நீச்சல்’ போட்டு வெற்றிபெற்றார்.

எதிர்நீச்சல் பாடல்கள் மாபெரும் வெற்றி, வெளிச்ச பூவே வா என ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து கத்தி படவாய்ப்பு. நிச்சயம் அனிருத் பாடல்களுக்கு விஜய்-ன் ஸ்கிரீன்பிரசன்ஸ் பக்கா மாஸாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு கத்தியை வைத்தே கத்தி படத்தின் தீம்சாங்கை தீட்டினார். விஜய்க்கு கத்தி சரி… நீல் நித்தின் முகேஷ்க்கு பக்கா ஸ்டைலிஷ் தீம். கத்தி தீம் சாங்கை காப்பி என பேசியவர்கள், வில்லன் தீம் சாங்கை கண்டு வாயடைத்துப் போனார்கள்.

அதையடுத்து மாரி படத்தில் தரலோக்கல் பாடல்கள் என்றால் என்ன என தமிழ் சினிமாவுக்கு பென்ச்மார்க் கொடுக்க, இசை என்றால் வரிகளை பாதிக்கக்கூடாது என்றவர்களுக்கு நானும் ரவுடி தான்ல் நீயும் நானும் என ஏங்கவைத்து மொத்த விமர்சனங்களுக்கும் பதில் கொடுத்துக்கொண்டே வந்தார். காதல், கோபம், அழுகை, தாய்மை, மகிழ்ச்சி என ஒவ்வொரு மனித உணர்வுகளுக்கு ஏற்றபடி புதுவகையான இசையை தந்துகொண்டிருக்கிறார்.

”எல்லா இசையமைப்பாளர்களும் பண்றது தான… அப்படி என்ன அனிருத்-திடம் ஸ்பெஷல்” என்றவர்களுக்கு தமிழ் சினிமாவின் மிகமுக்கிய குரல்களை யதார்த்தமாக தனது பாடல்களில் பயன்படுத்தியது. அது அனிருத்திற்கு கைவந்த கலை. விசால் தல்தனி , மொஹித் சவுஹான் என ‘3’ படத்தில் பயன்படுத்தியவர்களை விட்டுவிட்டு, அப்படியே ஜானகி, தேவா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் என பயன்படுத்தினார்.

இசையில் இத்தனை முயற்சி செய்தும் அனிருத் -ஐ பிடிக்காது என்பவர்களுக்கு கூட பாடகர் அனிருத்தை பிடிக்கும். ஏனென்றால், மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை மொத்தமாக தனதாக்கிக் கொள்வதில் அனிருத் ஒரு மான்ஸ்டர். அவருடைய இசையில் பாடுவதைவிட மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடுகையில், கொஞ்சும் அந்த குரல் ஒரு உணர்வை கடத்திச் சென்றுவிடும். அதற்கு யாஞ்சி, கண்ணம்மா ஒன்ன, கண்ணே கண்ணே, கும்முறு டப்பரா என ஹிட் லிஸ்ட்டுகள் எகிறிக்கொண்டே போகும். ஏன் இதுநாள் வரை அனிருத் பாடல் பாடி ஹிட்டாகாமல் இருந்த பாடல்களே இல்லை. தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு இசையமைப்பாளர் பல இசையமைப்பாளருடன் ஒன்றாக வேலை செய்வது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால் அதனை அனிருத் அசால்ட்டாக கடந்து வருகிறார்.

விவேக் – மெர்வின், இமான், யுவன், விஷால் சந்திரசேகர், நிவாஸ் கே பிரசன்னா, சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான், சாம் சி.எஸ். ஜிப்ரான் என கிட்டதட்ட தமிழ்சினிமாவின் அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்துவிட்டார். இது தவிர மலையாளம், இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் பாடியுள்ளார். அதேபோல் இன்று ஹை எனர்ஜியில் கத்தி ஒரு பாடலை பாட வேண்டும் என்றால், அதற்கு அனிருத் போதும் என மூளையில் பதிவாகிவிட்டார்.

இங்கே அனிருத் ரசிகர் என்றால் சமூக வலைதளங்களில் சிலர் கலாய்க்கk கூடும். ஏனென்றால் இங்கே அவருக்கு கிடைத்த தொடக்கம் அப்படி. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல் பாடலிலேயே உலகம் முழுவதும் சென்று சேர்ந்தவர். அதனாலோ என்னவோ, இவர் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். இதனால்தான் சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ஆர் – அனிருத் ஒப்பீடு நடந்துக்கொண்டே இருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மான் அளவிற்கு இல்லையென்றாலும் அனிருத்தும் தன்னால் முடிந்தவரை ஏ.ஆர்.ரஹ்மானோடு போட்டிபோட்டுக் கொண்டேதான் இருக்கிறார். ரஹ்மான் என்னும் மாபெரும் புயல் அளவிற்கு இல்லையென்றாலும், தென்றலாக வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார். ரஹ்மான் தரத்தில் இசையை கொடுக்க வேண்டும் என ஆரம்ப காலங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் முயல்வார். அதையடுத்து ஹாரிஸின் பாதை மாறியது. ஆனால் அனிருத்தோ தொடக்கம் முதலே தரத்தில் குறை வைத்ததில்லை. குறிப்பாக பின்னணி இசையின் தரம் அனிருத் படங்களில் குறையாக இருக்காது.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹிட் பாடல்களின் பின்னணி இசையை பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அது சில நேரம் சரியாக பொருந்தும். பல நேரங்களில் ஒத்துப் போகாது. ஆனால் அது ரஹ்மானுக்கு எப்போதும் கைகொடுக்கும். அதுபோல்தான் அனிருத்துக்கும். கத்தி தீம் சாங்கை பல்வேறு சிச்சூவேஷன்களில் மாற்றி இசைத்து ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்டியிருப்பார். விஜய் படம் என்பதால் இந்த முயற்சி என்பவர்களுக்கு, வேலைக்காரன் படத்தின் இசையை கேட்க சொல்வேன்.

வேலைக்காரன் படத்தில் ”இறைவா” என்னும் ஒற்றை பாடலில் அத்தனை வேரியேசன்களை கொடுத்திருப்பார் அனிருத். அதேதான் பின்னணி இசைக்கும், இப்படி ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றிக் கொண்டே போனவர், மற்ற மொழி திரைப்படத்தில் இசையமைக்கவே இல்லை.

மீடியாக்களிலும், விமர்சனங்களிலும் அனிருத் இசைக்கு மற்ற மொழி ரசிகர்கள் எல்லாம் ஆட்டம் போட மாட்டார்கள் என வந்தது. ஆனால் அனிருத் நிதானமாக தனது கோட்டையை கட்டிக்கொண்டு இருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், தனுஷ் ஆகியோருடன் வேலை செய்தாகிவிட்டது.

இதையடுத்து அப்படியே ஆந்திரா பக்கம் போவோம் என நினைத்தபோது தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் படத்தில் கமிட்டானார். அனிருத்தை தெலுங்கு சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. ஆனால் படம் அட்டர் ப்ளாப். அனைத்து திசைகளிலும் விமர்சனம். ஏன் அனிருத்திற்கு இந்த வேண்டாத வேளை என, ஆனால் தமிழ் சினிமாவில் அனிருத்தின் இடம் எப்போதும் அப்படியே இருந்தது.

அடுத்ததாக அனிருத் தெலுங்கு சினிமாவில் பெயரெடுக்க வேண்டும் என நினைத்தபோது வந்த ”ஜெர்சி” படத்தில் காலத்திற்கும் அந்த பின்னணி இசை நிற்கும் அளவிற்கு தடம்பதித்தார். அதையடுத்து அனிருத் என்ற பெயர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது. யுவனுடைய இசை எப்போதும் கடினமாக இருக்காது. அது மனதுக்கு நெருக்கமான ஒரு இடம் பார்த்து எளிதாக அமர்ந்துகொள்ளும். அதுபோல் அனிருத்தின் இசையும். ஆனால் யுவனுக்கு நேரெதிர். அவரது கீ போர்ட்டில் இருந்து வெளிவரும் இசை, நமக்குள் ஏதோ ஒரு கனமான உணர்வை ஏற்படுத்திவிடும்.

அனிருத்தை விமர்சிப்பவர்களை உட்கார வைத்து அவரது பாடல்களை ஒலிக்கவிட்டால் நிச்சயம் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். வேலையில்லா பட்டதாரியாக இருக்கட்டும், மான் கராத்தேவாக இருக்கட்டும், தங்க மகனாக இருக்கட்டும், ஏன் பேட்டயானாலும் சரி. நிச்சயம் அனிருத் அவருடைய தடத்தைப் பதித்திருப்பார். இதையெல்லாம் கடந்து இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் அனிருத் இசையமைக்கிறார். இதுவே சொல்கிறது யார் ராக்ஸ்டார் என…. #HappyBirthdayANIRUDH

Categories

Tech |