ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ரோஹிங்கியா சமூகத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிக்குபழியாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆயுதப்படை மண்டல தலைவர் ஷிஹாப் கைசர் கான் கூறியதாவது, “மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமில், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டோம்.
அப்போது, 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர், பலுகலி முகாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளோம். அதோடு அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.