இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 100ஆவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது. இதன்மூலம் 100 சர்வதேச டி20 போட்டிகளை ஆடும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதனிடையே பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 100ஆவது டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் அந்தப் பதிவில், ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என ஆச்சரியத்துடனும் குறிப்பிட்டிருந்தார்.
நேற்யைப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தது. பின்னர் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வங்கதேச அணியின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்தினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா 85, தவான் 31, ஷ்ரேயாஸ் 24* உள்ளிட்டோரின் அபார ஆட்டத்தில் வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரில் 1-1 என சமநிலை அடைந்தது. கங்குலி கூறியது போன்றே நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அணிக்கு வெற்றியையும் பெற்றுத்தந்தார்.
Rohit Sharma 100 matches in t20 .. What an asset he is to indian cricket …@ImRo45_FC @bcci.. congratulations
— Sourav Ganguly (@SGanguly99) November 7, 2019