தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் உழவர்சந்தை அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. இந்த தங்கும் விடுதிக்கு வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். அவர்கள் தாங்கள் வெளியூர் என்றும் இரவு நேரம் ஆகியதோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தங்குவதற்கு அறை வேண்டும் என விடுதி மேலாளரிடம் கேட்டனர். இதனையடுத்து தங்கும் விடுதி மேலாளர் அருள் என்பவர் அவர்களுக்கு ஒரு அறையை கொடுத்தார். அந்த அறைக்கு சென்றபின் இருவரும் கதவை தாழிட்டுக் கொண்டனர். அதன்பின் பெண்ணுடன் வந்த வாலிபர் மட்டும் வெளியே வந்தார். அப்போது வாலிபர் விடுதியின் வரவேற்பு அறையில் இருந்த நபர்களிடம் சாப்பாடு வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் அந்த வாலிபர் தங்கும் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதனிடையில் அந்த பெண் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை. எனவே வாலிபரும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் அந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பெண் இறந்து சடலமாக கிடந்ததை பார்த்து தங்கும் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த பெண் புடவையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “சடலமாக கிடந்த பெண் கடலூர் மாவட்டம் அடரிகளத்தூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசி என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சிலம்பரசி கணவர் வெளிநாட்டில் இருப்பதும், இவர்களுக்கு 2 மகன்களும், 1 பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது. இதில் சிலம்பரசியுடன் தங்கியிருந்த வாலிபர் அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் சிலம்பரசியை வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக” காவல்துறையினருக்கு தெரியவந்தது. இவ்வாறு பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.