கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 213 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக குற்றசாட்டு பெறப்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் இயங்கிவரும் ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் அர்ச்சுணன் என்பவர் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது அர்ச்சுணன் அலட்சியமாக பேசியுள்ளார். இதனை அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியர் அர்ச்சுணனை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதன்பின் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபானக் கடைகளில் விலைப்பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விற்பனை விலையை விட கூடுதலாக மதுவை விற்கக்கூடாது என்று பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையும் மீறி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.