இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சாராய கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று அதிகாலையில் கீழ்வேளூர் – கச்சனம் சாலை பகுதியிலுள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் அவர்கள் மூட்டைகளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கீழ்வேளூர் அருகில் உள்ள புலியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த தினகரன் ,நாகை அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் மற்றும் நாகை செல்லும் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாய பிரகாஷ் ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த கீழ்வேளூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 331 லிட்டர் சாராயம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.