இரு சிறுவர்கள் ரொட்டியை திருடிய குற்றத்திற்காக அவர்களை தலீபான்கள் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. அங்கு அவர்கள் புதிய இடைக்கால அரசை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்களின் புதிய ஆட்சியை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இதற்கிடையில் தலீபான்கள் தற்பொழுது தங்களின் உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் கடுமையான தண்டனைகளை அறிவித்தது மட்டுமின்றி சடலங்களையும் பொதுஇடத்தில் தொங்கவிட்டு மக்கள் பார்க்கும்படி செய்தனர்.
இந்த நிலையில் இரு சிறுவர்களை கம்பத்தில் கட்டி வைத்து தலீபான்கள் துன்புறுத்தியுள்ளனர். குறிப்பாக அவர்கள் இருவரும் ரொட்டி திருடியதற்காக இந்த தண்டனை அளித்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் சிக்கிய சிறுவர்களில் ஒருவர் கூறியது “எனது குடும்பம் பசிக்கொடுமையால் மூன்று நாட்களாக தவித்து வருகிறது. அதனால் எனக்கு வேறு வழி தெரியாமல் திருடி விட்டேன். என்னிடம் வேலையும் இல்லை உணவும் இல்லை.
மேலும் என் குடும்பம் பசியால் தவிப்பதை என்னால் காண இயலவில்லை” என்று கூறியுள்ளார். குறிப்பாக 93% ஆப்கானியர்கள் போதுமான உணவின்றி தவித்து வருவதாகவும் பசிக் கொடுமையில் உள்ளதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. அதிலும் ஆப்கானில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றியதால் வங்கிகள் மூடப்பட்டு வர்த்தகங்கள் முடங்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.